search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்கள்"

    • இரண்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • விருதுநகர், சாத்தூர் வழியாக 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

    சென்னை:

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே இரண்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 6-ஆம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம் விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி,மதுரை திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர் வழியாக 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

    அதேபோல வருகிற 7-ஆம் தேதி இரவு திருச்செந்தூரிலிருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயிலானது ஆறுமுகநேரி, நசரத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக 8 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இவ்வாறு தெற்கு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தோர், தங்களது சொந்த வாகனங்கள் மூலமாகவும், புறப்பட்டுள்ளனர்.
    • தாம்பரம் ரெயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை திருநாள் வரும் 31ஆம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கியிருந்து பணிபுரிந்துவரும் மக்கள், தீபாவளியை சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக புறப்பட்டு வருகின்றனர். அதிகப்படியான மக்கள், தீபாவளிக்கு முந்தைய நாள் (புதன்கிழமை) விடுமுறை எடுத்துக்கொண்டு இன்றில் இருந்தே சொந்த ஊர் புறப்பட தயாராகிவிட்டனர்.

    நாளை இதை விட இன்னும் அதிக கூட்டம் இருக்கும் என்பதால், மக்கள் இன்று மாலையில் இருந்தே சொந்த ஊர் புறப்பட்டு வருவதால், சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    குறிப்பாக, சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தோர், தங்களது சொந்த வாகனங்கள் மூலமாகவும், புறப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தாம்பரம், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். அவர்களை அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் தடுத்து நிறுத்தி வரிசையில் நின்றவாறு ரெயில்களுக்குள் செல்ல அனுமதித்து வருகின்றனர். பஸ், ரெயில் நிலையங்களில் இன்றே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், நாளை இதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தீபாவளிக்காக 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
    • கடந்த ஆண்டு தீபாவளி, சாத் பூஜையின்போது 4,500 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகை மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    நாள்தோறும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கு ஏராளமான பயணிகள் பயணம் செய்வதால், வடக்கு ரெயில்வே கணிசமான எண்ணிக்கையிலான ரெயில்களை இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 7,000 சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளோம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிறப்பு ரெயில்களைத் தவிர, பயணத்திற்கான கூடுதல் திறனை உருவாக்க ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் அதிகரிக்கப்படுகின்றன என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் சாத் பூஜையின்போது மக்கள் கூட்டத்தை சமாளிக்க 4,500 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முதல்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
    • சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 30, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தென் மாவட்டங்கள், கேரளா, வெளிமாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து விரைவு ரெயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முக்கிய வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களில் அதிக அளவில் காத்திருப்போர் பட்டியல் காணப்படும் நிலையில் அங்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    இந்நிலையில், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் புறப்படும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ரெயில்களில் மொத்தமாக 7000 வரை காத்திருப்போர் பட்டியல் உள்ளது. பயணிகள் வசதிக்காக வருகிற 25-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையும் அனுப்பப்பட்டுள்ளது.

    இதேபோன்று, சாத் பண்டிகையை முன்னிட்டு வருகிற 23-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து புதுடெல்லி, அகமதாபாத்துக்கு வாரம் இருமுறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வேக்கு உட்பட வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகா்கோவில், கோவை, திருவனந்தபுரம், மங்களூர், பெங்களூரு, மைசூா் உள்ளிட்ட நகரங்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதில், சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 29, நவம்பர் 5-ந் தேதிகளில் நாகர்கோவிலுக்கும், வருகிற 29, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் கோவைக்கும், வருகிற 30, நவம்பர் 6 ஆகிய தேதிகளில் திருநெல்வேலிக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 30, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு நவம்பர் 2-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படும். கொச்சுவேலி-பெங்களூரு இடையே நவம்பர் 4-ந் தேதியும், நாகா்கோவில்-மைசூா் இடையே நவம்பர் 2-ந் தேதியும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    இதேபோன்று, சென்னை, எா்ணாகுளத்தில் இருந்து புதுடெல்லி மற்றும் அகமதாபாத்துக்கு நவம்பர் 15-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
    • எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இடம் கிடைக்காத வெகு தூரம் பயணிப்போர் ஆம்னி பஸ்களில் பயணித்தனர்.

    சென்னை:

    ஆயுத பூஜை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) விஜயதசமி, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும்.

    எனவே கல்வி, பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்போர் நேற்று முன்தினம் முதலே சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கினர். அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விரைவு பஸ்களில் பயணிக்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இவற்றில் பயணிக்க வந்தவர்களால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பஸ் நிலையங்களை அடைய மாநகர பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் போன்றவற்றில் பயணித்தவர்களால் அங்கும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    அதே நேரம், சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த வாகனங்களில் ஊர் சென்றதாலும், பூஜை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கடை தெருவுக்கு வந்ததாலும் முக்கிய சாலை, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இது ஒருபுறம் இருக்க, சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ரெயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வழக்கமான ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, தாம்பரத்தில் இருந்து கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு ரெயில்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இடம் கிடைக்காத வெகு தூரம் பயணிப்போர் ஆம்னி பஸ்களில் பயணித்தனர். அவர்கள், வழக்கத்தை விட அதிக தொகை செலுத்தி பயணிக்க வேண்டியிருப்பதாக கவலை தெரிவித்தனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பஸ், ஆம்னி பஸ் மூலம் 3 லட்சத்துக்கு மேற்பட்டோரும், ரெயில்கள் மூலம் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் என மொத்தமாக சுமார் 7 லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.

    இதுமட்டுமின்றி பலர் தங்கள் சொந்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

    • சிறப்பு ரெயில்கள் மூலம் மொத்தம் 302 ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
    • 6 ஆயிரம் சிறப்பு ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தெற்கு ரெயில்வே சார்பில் 34 சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் மொத்தம் 302 ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல, இந்திய ரெயில்வே துறை மூலம் இந்த ஆண்டு மொத்தம் 6 ஆயிரம் சிறப்பு ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விழாக்கால கூட்டநெரிசலை தவிர்க்க ஏதுவாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நவம்பர் 7 மற்றும் 8-ந் தேதிகளில் ‘சத் பூஜை’ கொண்டாடப்படுகிறது.
    • கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 4 ஆயிரத்து 429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன. அக்டோபர் 9-ந் தேதி துர்கா பூஜை தொடங்குகிறது. அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    நவம்பர் 7 மற்றும் 8-ந் தேதிகளில் 'சத் பூஜை' கொண்டாடப்படுகிறது. பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். 4 நாட்கள் விரதம் இருந்து புனித நீராடி சூரிய கடவுளை வழிபடுவது இதன் முக்கிய அம்சம் ஆகும்.

    துர்கா பூஜை, மேற்கு வங்காளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    அதனால், இந்த பண்டிகை காலத்தில், பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் நிரம்பி வழிவது வழக்கம்.

    இதை கருத்தில்கொண்டு, பண்டிகை காலத்தை முன்னிட்டு சுமார் 6 ஆயிரம் சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 4 ஆயிரத்து 429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இதுவரை 5 ஆயிரத்து 975 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்மூலம் 1 கோடிக்கு மேற்பட்ட பயணிகள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல முடியும்.

    இதுதவிர, பயணிகள் நெரிசலை சமாளிக்க 108 ரெயில்களில் கூடுதலாக பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 12 ஆயிரத்து 500 பெட்டிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓணம் பண்டிகையை யொட்டி சிறப்பு ரெயில் அறிவிப்பு.
    • கேரளாவுக்கு 3 சிறப்பு ரெயில்கள்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06161) மறுநாள் காலை 8.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

    மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (15-ந்தேதி) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06163) மறுநாள் மதியம் 1.30 மணிக்கு கண்ணூா் சென்றடையும்.

    மறுமாா்க்கமாக கண்ணூரில் இருந்து திங்கட்கிழமை (16-ந்தேதி) பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இந்த ரெயில்கள் பெரம்பூா், காட்பாடி, ஜோலாா் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, ஷொரனூா், திரூா், கோழிக்கோடு, வடகரை வழியாக இயக்கப்படும்.

    சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06160) நாளை காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

    இந்த ரெயில் பெரம்பூா், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், கொல்லம் வழியாக இயக்கப்படும்.

    இந்த ரெயில் மறுமாா்க்கமாக இயக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் காலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது.
    • 22 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களின் நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு இன்று (10-ந் தேதி) முதல் அந்த வழித்தடத்தில் செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    அதன்படி நெல்லையில் இருந்து நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை 8 மணிக்கு புறப்படும் ஹாபா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 19577) காலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது.

    வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20923) ரெயிலும் காலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 22 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ந் தேதி வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வாராந்திர சிறப்பு ரெயில் கேரள மாா்க்கமாக இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது.
    • மறுமாா்க்கமாக ஜூன் 10, 24 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு எழும்பூருக்கு புறப்படும் சிறப்பு ரெயிலும் (எண்: 06070) மறுமாா்க்கத்தில் எழும்பூரில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் ரெயிலும் (எண்: 06069) ஜூன் 6-ந் தேதி முதல் ஜூன் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், நாகர்கோவில்-சென்னை எழும்பூா் இடையே இயங்கும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்: 06019/06020) கேரள மாா்க்கமாக இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, நாகா்கோவிலில் இருந்து ஜூன் 9, 23 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரெயில் எழும்பூருக்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு வந்தடையும்.

    மறுமாா்க்கமாக ஜூன் 10, 24 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே வழியாக மறுநாள் காலை 3.15 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில் சென்னையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.
    • மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    நாகப்பட்டினம்:

    தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறை தொடங்கியுள்ளதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு மே 17-ந் தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரைவு ரெயில் (06037) இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் சென்னையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.

    இதேபோல, மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மே 18-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் விரைவு ரெயில் (06038) இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 11.30 மணிக்கு சென்றடையும்.

    தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாப்புலியூர், கடலூர் போர்ட், சிதம்பரம், சீர்காழி, வைதீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.
    • சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நேற்று அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்தது. தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தததால் சொந்த ஊர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு சென்றனர்.

    சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கின. தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கியது.

    இந்த நிலையில் ஓட்டு போட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக கூடுதலாக பஸ் வசதியை அரசு போக்குவரத்து கழகங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் செய்துள்ளது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சனி, ஞாயிறு தொடர் விடுமுறை கிடைப்பதால் 22-ந்தேதி (திங்கட்கிழமை) வேலைக்கு செல்ல வசதியாக பெரும்பாலும் நாளை பயணத்தை தொடர்வார்கள்.

    அதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், ஓசூர், திருப்பூர், சிதம்பரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.

    தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் விடப்பட்டு உள்ளது. இந்த ரெயில் தூத்துக்குடியில் இன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு நாளை அதிகாலை 3.50 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் 4.45 மணிக்கு சென்ட்ரல் நிலையம் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாதவை. இந்த ரெயில் மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது.

    மற்றொரு சிறப்பு ரெயில் திருச்சியில் இருந்து எழும்பூருக்கு இன்று இயக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ரெயில் பகல் 1.20 மணிக்கு எழும்பூர் வந்து சேர்ந்தது.

    இதே போல் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரத்தில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து நாளை பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கூறும்போது நாளை (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்ய 34 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன. பொதுமக்கள் நெரிசலை தவிர்க்க அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றார்.

    ×